தமிழக அரசு தடை விதித்த, குழாய்கள் மூலம் தமிழகம் வழியாக மங்களூருக்கு இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கொச்சியிலிருந்து தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வழியாக மங்களூருக்கு குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய அரசின் கெயில் (கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்) நிறுவனம் செயல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
விளைநிலங்கள் வழியாக எரிவாயுவைக் கொண்டு செல்லும் திட்டத்திற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விவசாய நிலத்தின் செழுமை பாதிக்கப்படும் என்று விவசாயிகள் தெரிவித்திருந்தனர். பல்வேறு கட்ட போராட்டங்களையும் 7 மாவட்ட விவசாயிகள் நடத்தினர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற, தமிழக அரசு, குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்லும் கெயிலின் திட்டத்துக்கு தடை விதிப்பதாக அறிவித்தது. மேலும் ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழாய்களை அகற்றவும் தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து கெயில் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது. குழாய்களை அகற்ற, இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தமிழகம் வழியாக எரிவாயுக் குழாய் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசின் கெயில் (கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்) நிறுவனம் தொடர அனுமதி அளித்துள்ளது.